இந்தியாவுக்கு திரும்ப முடிவு
யுத்த சேவையிலிருந்து நான் விடுவிக்கப்பட்டதும்,
இனி நான் செய்ய வேண்டிய வேலை, இந்தியாவில்தானே அன்றி தென்னாப்பிரிக்காவில்
அல்ல என்பதை உணர்ந்தேன். இப்படி நான் எண்ணியதற்குக் காரணம்,
தென் ஆப்பிரிக்காவில் இனி செய்வதற்கு எதுவுமே இல்லை என்பது அல்ல.
ஆனால், அங்கே என் முக்கியமான வேலை, பணம் சம்பாதிப்பதாகவே ஆகிவிடும்
என்று அஞ்சினேன்.
தாய் நாட்டில் இருந்த நண்பர்களும், திரும்பி
வந்துவிடுமாறு என்னை வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். இந்தியாவில்
நான் அதிகமாகச் சேவை செய்ய முடியும் என்றும் எண்ணினேன். தென்னாப்பிரிக்காவிலிருக்கும்
வேலைகளுக்கோ, ஸ்ரீ கானும், ஸ்ரீ மன்சுக்லால் நாஸரும் இருக்கிறார்கள்.
ஆகையால், என்னை விடுவிக்குமாறு எனது சக ஊழியர்களைக் கேட்டுக்
கொண்டேன். என் கோரிக்கை அதிகச் சிரமத்தின் பேரிலும், ஒரு நிபந்தனையின்
பேரிலும் ஒப்புக்கொள்ளப் பட்டது. ஓர் ஆண்டிற்குள் தென்னாப்பிரிக்க
இந்தியர் சமூகம் என்னை விரும்பினால் தென்னாப்பிரிக்காவுக்குத்
திரும்பிவிட நான் தயாராக இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.
இது கஷ்டமான நிபந்தனை என்று கருதினேன். ஆயினும் சமூகத்தினுடன்
என்னை பிணைத்திருந்த அன்பின் காரணமாக அந்த நிபந்தனைக்கு ஒப்புக்
கொண்டேன். அன்பெனும் நூலிழையினால் கண்ணன் என்னைக் கட்டிவிட்டான்.
நானும் அவனுக்கு முழு அடிமையாகிவிட்டேன் என்று மீராபாய் பாடினாள்.
சமூகத்துடன் என்னைப் பிணைத்திருந்த அன்பெனும் நூல் இழை, என்னைப்
பொறுத்த வரையிலும் கூட, அறுந்துவிட முடியாததாகப் பலம் உள்ளதாகத்தான்
இருந்தது. பொதுஜன வாக்கே கடவுள் வாக்கு, இங்கே நண்பர்களின் வாக்கு,
மனப்பூர்வமான உண்மைவாக்காக இருந்ததால், அதைத் தட்டிவிடவும் முடியவில்லை.
நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு, புறப்படுவதற்கு அவர்களுடைய அனுமதியைப்
பெற்றேன்.
அச் சமயம் எனக்கு நேட்டாலுடன் மாத்திரமே நெருங்கிய
தொடர்பு இருந்தது. நேட்டால் இந்தியர் அன்பு என்ற அமிர்தத்தை
என்மீது பொழிந்துவிட்டார்கள். ஒவ்வோர் இடத்திலும் பிரிவுபசாரக்
கூட்டம் நடத்தினார்கள். விலையுயர்ந்த வெகுமதிகளையும் எனக்கு
அளித்தார்கள். 1899இல் நான் இந்தியாவுக்குப் புறப்பட்டபோதும்
இத்தகைய வெகுமதிகளை எனக்குக் கொடுத்தனர். ஆனால், இத்தடவையிலோ,
பிரிவுபசாரம் அளவு கடந்தாக இருந்தது. வெள்ளி, தங்கச் சாமான்களும்
அன்பளிப்பில் அடங்கியிருந்ததோடு, விலையுயர்ந்த வைரச் சாமான்களும்
இருந்தன.
இந்த வெகுமதிகளையெல்லாம் ஏற்றுக்கொள்ள எனக்கு
என்ன உரிமை இருக்கிறது? இவைகளையெல்லாம் வாங்கிக் கொண்ட பிறகு,
ஊதியம் பெறாமல் சமூகத்திற்குச் சேவை செய்து வந்திருப்பதாக நான்
எண்ணிக் கொள்ளுவது எப்படி? என் கட்சிக்காரர்கள் கொடுத்த சில
வெகுமதிகளைத் தவிர மற்றவை யாவும், சமூகத்திற்கு நான் செய்த சேவைக்கு
என்றே முற்றும் எனக்கு அளிக்கப்பட்டவைகள் ஆகும். என் கட்சிக்
காரர்களும் பொது வேலையில் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது, கட்சிக்காரர்கள் வேறு, பொது ஊழியர்கள்
வேறு என்று பாகுபாடு செய்துகொள்ளுவதற்கும் இல்லை. கிடைத்த வெகுமதிகளில்
ஒன்று தங்கச் சங்கிலி. அது 52 பவுன் பெறுமானம் உள்ளது. என் மனைவிக்கு
என்று அதை அளித்தனர். ஆனால் அதுவும்கூட என்னுடைய பொதுசேவைக்கு
அளிக்கப்பட்ட வெகுமதியே. ஆகையால் மற்றவைகளிலிருந்து அதை நான்
தனியாக பிரித்துவிட முடியாது.
ஒரு நாள் மாலை, இந்த வெகுமதிகளில் பெரும் பகுதியை
எனக்கு அளித்தார்கள். அன்று இரவெல்லாம் என்னால் தூங்கவே முடியவில்லை.
என் அறையில் அங்கும் இங்கும் இரவெல்லாம் உலாவினேன், தீவிரமாகச்
சிந்தித்தேன். ஆனால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆயிரக்கணக்கில்
மதிப்புள்ள இந்த வெகுமதிகளை வேண்டாம் என்று துறந்து விடுவது
எனக்குக் கஷ்டமாக இருந்தது. அவைகளை வைத்துக் கொள்ளுவதோ இன்னும்
அதிகக் கஷ்டமாக இருந்தது. அவைகளை நான் வைத்துக் கொள்கிறேன் என்றாலும்
என் குழந்தைகளின் சங்கதி என்ன? என் மனைவியின் விஷயம் என்ன? சேவைக்கு
வேண்டிய வாழ்க்கை நடத்த அவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
சேவை ஒன்றே அதற்குரிய சன்மானம் என்றும் அவர்களுக்குச் சொல்லி
வந்திருக்கிறேன்.
வீட்டில் என்னிடம் விலை உயர்ந்த நகை எதுவும்
இல்லை. எங்கள் வாழ்க்கையையே விரைவாக எளிமை ஆக்கிக்கொண்டு வந்திருக்கிறோம்.
அப்படியிருக்கத் தங்கக் கடிகாரங்களை நாங்கள் எவ்வாறு வைத்துக்
கொள்ள முடியும்? மக்கள், நகைகளின் மீது இருக்கும் ஆசையை விட்டுவிட
வேண்டும் என்று பல தடவை நான் மக்களுக்கு உபதேசம் செய்தும் இருக்கிறேன்.
அப்படியிருக்க என்னிடம் வந்திருக்கும் நகைகளை நான் என்ன செய்வது?
இந்த வெகுமதிகளையெல்லாம் நான் வைத்துக் கொள்ளக்
கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். இவற்றையெல்லாம் சமூகத்திற்கே
சொந்தமானதாக்கி, இதற்குச் சில தரும கர்த்தாக்களை நியமித்து,
ஒரு கடிதம் எழுதினேன். பார்ஸி ருஸ்தம்ஜியையும் மற்றும் சிலரையும்
தருமகர்த்தாக்களாக நியமித்தேன். காலையில் என் மனைவியுடனும் குழந்தைகளோடும்
ஆலோசனையை நடத்தி இப் பெரும் பாரத்தை நிவர்த்தி செய்து கொண்டேன்.
இதற்கு என் மனைவியைச் சம்மதிக்கச் செய்வதில் கொஞ்சம் சிரமம்
இருக்கும் என்பதை அறிவேன். குழந்தைகளைப் பொறுத்த வரையில் எந்தவிதமான
கஷ்டமும் இராது என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே, அவர்களையே
என் வக்கீல்கள் ஆக்கிக்கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.
என் யோசனைகளைக் குழந்தைகள் உடனே ஏற்றுக் கொண்டு
விட்டனர். இந்த விலையுயர்ந்த வெகுமதிகள் நமக்குத் தேவையில்லை.
ஆகையால், அவற்றைச் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுத்து விட வேண்டியதே.
அவை நமக்கு எப்பொழுதாவது தேவைப்பட்டால் நாம் அவற்றை எளிதில்
விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று குழந்தைகள் கூறினர். நான்
ஆனந்தம் அடைந்தேன். ஞஅப்படியானால், உங்கள் தாயாரிடம் இதைக் குறித்து
எடுத்துக் கூறி, அவளும் இதற்குச் சம்மதிக்கச் செய்வீர்கள் அல்லவா?
என்று கேட்டேன். நிச்சயமாகச் செய்வோம். அது எங்கள் வேலை. அம்மாவுக்கு
நகைகள் வேண்டியதில்லை. அவைகளை எங்களுக்காக வைத்திருக்க வேண்டும்
என்றே அவர் விரும்புவார். எங்களுக்கு அவை தேவையில்லை என்று நாங்கள்
கூறும்போது, அவைகளைக் கொடுத்துவிட அம்மா ஏன் சம்மதிக்க மாட்டார்?என்றும்
கூறினர்.
பேச்சளவில் இது எளிதாகத்தான் இருந்தது. ஆனால்
காரியத்திலோ அது அதிகக் கஷ்டமாக இருந்தது. என் மனைவி கூறியதாவது
இவையெல்லாம் உங்களுக்குத் தேவைப்படாமல் இருக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கும்
அவை வேண்டாம் என்று இருக்கலாம். அவர்களை நீங்கள் தட்டிக் கொடுத்தால்
உங்கள் இஷ்டப்படியெல்லாம் அவர்கள் கூத்தாடுவார்கள். நகைகளை நான்
போட்டுக் கொள்வதை நீங்கள் அனுமதிக்காமலிருப்பதை நான் புரிந்து
கொள்ளுகிறேன். ஆனால் என் மருமகப் பெண்கள் வரும்போது அவர்கள்
விஷயம் என்ன? நிச்சயம் அவர்களுக்கு நகைகள் வேண்டியிருக்கும்.
நாளைக்கு நம் நிலைமை எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்?
அதிக அன்போடு அளிக்கப்பட்ட இந்த வெகுமதிகளைத் திருப்பிக் கொடுத்துவிட
நான் ஒரு போதும் சம்மதிக்கவே மாட்டேன்.
இவ்வாறு அவள் வாதங்களைச் சண்டமாருதமாகப் பொழிந்தாள்.
முடிவில் கண்ணீர் வடித்தும் அவற்றைப் பலப்படுத்தினாள். ஆனால்
குழந்தைகளோ உறுதியுடன் இருந்தார்கள். நானும் அசையவில்லை. நான்
சாந்தமாகப் பின்வருமாறு கூறினேன். குழந்தைகளுக்கு இனிமேல்தான்
விவாகம் நடக்க வேண்டும். அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே
விவாகம் செய்து வைத்துவிட நாம் விரும்பவில்லை. அவர்கள் வளர்ந்ததும்,
அவர்கள் காரியங்களை அவர்களே முடித்துக் கொள்ளுவார்கள். மேலும்,
நகைப் பித்துப் பிடித்த பெண்களை நம் குமாரர்களுக்கு நாம் மணம்
செய்து வைக்கப் போவதில்லை என்பதும் நிச்சயம். அவர்களுக்கு நகை
போட வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் அவற்றை வாங்கிக் கொடுக்க நான்
இருக்கிறேன். அப்பொழுது நீ என்னைக் கேள்.
அதற்கு அவள், உங்களைக் கேட்பதா? இவ்வளவு நாள்
பழகியும் உங்களை எனக்குத் தெரியாதா? என் நகைகளைப் பிடுங்கிக்
கொண்டீர்கள். அவற்றை நான் போட்டுக்கொண்டு நிம்மதியாக இருக்கவும்
நீங்கள் என்னை விடவில்லை. இப்படிப்பட்ட நீங்கள் மருமக்கள்மார்களுக்கு
நகை வேறு செய்து போட்டுவிட்டுப் போகிறீர்களாக்கும் முடியாது.
நகைகளை நான் திருப்பிக் கொடுக்கப்போவதில்லை. மேலும் என்னுடைய
கழுத்துச் சரத்தைக் கேட்க, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
என்றாள். ஆனால், அந்தக் கழுத்துச் சரத்தை உனக்கு கொடுத்தது என்
சேவைக்காகவா, உன் சேவைக்காவா? என்று நான் கேட்டேன்.
உங்கள் சேவைக்காகவே என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன்.
ஆனால், நீங்கள் செய்த சேவை, நான் செய்த சேவையே அல்லவா? உங்களுக்காக
இரவு பகல் நான் பாடுபட்டு உழைத்திருக்கிறேன். அதெல்லாம் சேவையல்லவா?
போகிறவர்கள் வருகிறவர்களையெல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து
அவர்களுக்கெல்லாம் அடிமையாக உழைத்தேனே என்றாள் என் மனைவி. இச்
சொல்லம்புகள் என் உள்ளத்தில் தைத்தன. அவற்றுள் சில ஆழப் பதிந்தன.
ஆனாலும் நகைகளைத் திருப்பிக் கொடுத்துவிடுவது என்று நான் உறுதி
கொண்டுவிட்டேன். இதற்கு அவளும் முடிவாகச் சம்மதித்துவிடும்படி
செய்வதில் எப்படியோ வெற்றி பெற்றேன். 1896, 1901ஆம் ஆண்டுகளில்
கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள் யாவும் திருப்பிக் கொடுக்கப்பட்டு
விட்டன. ஒரு தருமகர்த்தாப் பத்திரம் தயாரித்தேன். அந்த வெகுமதிகளையெல்லாம்
ஒரு பாங்கில் ஒப்படைத்தேன். என் விருப்பப்படியோ தருமகர்த்தாகளின்
விருப்பப்படியோ, இந் நிதியைச் சமூகத்தின் சேவைக்குப் பயன்படுத்துவது
என்று ஏற்பாடு செய்தேன்.
பொதுஜன காரியங்களுக்கு நிதி எனக்குத் தேவைப்பட்டு,
இந்தத் தரும நிதியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியதே என்று
நான் எண்ணிய போதெல்லாம், தேவைக்கு வேண்டிய பணத்தை வெளியிலேயே
வசூல் செய்துகொள்ள என்னால் முடிந்திருக்கிறது. ஆகையால், அந்த
நிதி அப்படியே செலவாகாமல் இருந்தது. அந்த நிதி இன்னும் இருந்து
வருகிறது. தேவைப்படும் போது செலவிட்டு வருகிறார்கள். ஒழுங்காக
அந் நிதி சேர்ந்து கொண்டும் வருகிறது. இவ்வாறு இந்நிதியை உண்டாக்கியதற்காக
நான் என்றும் வருந்தியதே இல்லை. சில ஆண்டுகளானதும், அப்படிச்
செய்தது தான் புத்திசாலித்தனமானது என்பதை என் மனைவியும் அறிந்து
கொண்டாள். எத்தனையோ ஆசைகளிலிருந்து அது எங்களை பாதுகாத்தது.
பொதுஜன சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள், விலை உயர்ந்த வெகுமதிகளை
ஏற்றுக்கொள்ளவே கூடாது என்பது என்னுடைய திடமான அபிப்பிராயம்.